புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வோன் டெர் லியென் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தனர். டெல்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐதராபாத் இல்லத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வோன் டெரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பிறகு, இரு தரப்பினரிடையிலான உறவு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஆகியோர் முன்னிலையில், ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் மற்றும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.மோடி கூறுகையில்,‘‘இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு இயற்கையானது, ஆக்கபூர்வமானது. கடந்த இருதினங்களாக பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் நிலையிலான கிட்டத்தட்ட 20 கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். பல்வேறு பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டன. நமது நட்புறவை மேம்படுத்தவும், விரைவுபடுத்தவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
The post பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.