புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை மறுநாள் சவுதி பயணம் மேற்கொள்ளும் நிலையில், 42,000 பேரின் ஹஜ் புனிதப் பயணம் உறுதியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அத்தகைய முயற்சிகளின் விளைவாக, 2014-ல் 136,020 ஆக இருந்த இந்தியாவுக்கான ஹஜ் புனித யாத்திரை ஒதுக்கீடு 2025-ல் 1,75,025 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கான பயண ஏற்பாடுகளை நிர்வகிக்கிறது. இது நடப்பு ஆண்டில் 1,22,518 ஆக இருந்தது. மீதமுள்ள ஒதுக்கீட்டு (சுமார் 42,000) எண்ணிக்கை வழக்கம்போல் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சவூதி வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் காரணமாக, 800க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் ஒருங்கிணைந்த ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் என 26 சட்டபூர்வமான நிறுவனங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.
சட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த 26 குழுக்களுக்கு ஹஜ் ஒதுக்கீடு ஒன்றிய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தால் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டது. எனினும் இந்தக் குழுக்கள் சவுதி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உறுதிசெய்யத் தவறிவிட்டனர். இதனால் இந்தியாவில் இருந்து சுமார் 42,000 பேர் பங்கேற்கவிருந்த ஹஜ் பயணம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையல் பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஏப். 22) சவுதி அரேபியா செல்கிறார். அப்போது ஹஜ் பயண சிக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஹஜ் பயண பிரச்னையை தீர்க்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் தயாராக இருக்குமாறு ஒன்றிய சிறுபான்மையினர் நல அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமர் ேமாடி இரண்டு நாள் பயணமாக வரும் 20ம் தேதி சவுதியின் ஜித்தாவிற்கு செல்கிறார். அப்போது உலகளாவிய மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். பிரதமரின் பயணத்திற்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இந்தியாவுக்கும் சவுதிக்கும் இடையிலான இருதரப்பு உறவில் ஹஜ் பயணம் முக்கியமான அம்சமாகும்’ என்றார். ஹஸ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாக, சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், ஒன்றிய அரசின் தரப்பில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
The post பிரதமர் மோடி நாளை மறுநாள் சவுதி பயணம்; 42,000 பேரின் ஹஜ் புனிதப் பயணம் உறுதியாகுமா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.