பாகல்பூர்: ‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள், காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் மகா கும்பமேளாவை மோசமாக பேசுகிறார்கள்’ என பீகாரில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை கடுமையாக தாக்கினார். பீகாருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி அங்கு பாகல்பூரில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். காவி நிறம் பூசப்பட்ட திறந்த வாகனத்தில் நின்றபடி நிகழ்ச்சி நடக்கும் இடம் வரையிலும் வாகன பேரணி சென்ற அவர், பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடிக்கான நிதி உதவியை வழங்கினார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரான லாலுவை கடுமையாக தாக்கி பேசினார். எந்த இடத்திலும் லாலுவின் பெயரை குறிப்பிடாமல் ‘காட்டாட்சி நடத்தியவர்கள்‘, ‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள்’ என பலமுறை மோடி கூறினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் ஒற்றுமையின் மிகப்பெரிய கொண்டாட்டம் மகா கும்பமேளா. அங்கு புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை ஐரோப்பிய மக்கள் தொகையை விட அதிகம். ஆனால் காட்டாட்சி கும்பல் மகா கும்பமேளாவை பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். அவர்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் எதிர்தவர்கள்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடக்கும் வேளையில் நான் மந்தர் மலைக்கு அருகில் இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இங்கு பக்கத்து மாவட்டத்தில் உள்ள மந்தர் மலையை தான் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைக்க மத்தாக பயன்படுத்தினார்கள். இதில் எடுக்கப்பட்ட அமிர்தம் கும்பத்தில் சேகரிக்கப்பட்டது. அப்போது அதன் சில துளிகள் பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்துவார் ஆகிய 4 புனித தலங்களில் விழுந்தது. இதே போல, பண்டைய மகத ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்த பாடலிபுத்திரத்தைப் போலவே, வளர்ந்த இந்தியாவிலும் பீகார் போற்றப்படும். நமது மகத்தான பண்டைய பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளமான எதிர்காலத்தை அடையவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரே நேரத்தில் செயல்படுகிறது. ஆனால் பீகாரில் காட்டாட்சியை அறிமுகம் செய்தவர்கள், நமது பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் வெறுக்கிறார்கள். பீகார் மக்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* தீவனம் தின்றவர்கள்
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘தீவனத்தை திருடி தின்றவர்கள் கால்நடைகளுக்கு சமம். அப்படிப்பட்டவர்கள் எப்படி விவசாயிகள் நலனில் அக்கறை காட்டுவார்கள்’’ என்றார். கால்நடை தீவன ஊழலில் சிக்கி பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post பீகாரில் லாலுவை விளாசிய பிரதமர் மோடி காட்டாட்சியை நடத்தியவர்கள் கும்பமேளாவை பழிக்கிறார்கள் appeared first on Dinakaran.