புதுடெல்லி: ரயில்வே (திருத்த) மசோதா, 2024 மூலம் ரயில்வே வாரியத்தின் கட்டுப்பாட்டை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கிறது என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். ரயில்வே (திருத்த)மசோதா 2024 கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தை துவக்கி வைத்து காங்கிரஸ் எம்பி விவேக் தன்கா பேசுகையில்,‘‘ரயில்வே வாரியத்தை அரசாங்கமயமாக்க முயற்சி நடக்கிறது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் ரயில்வே வாரியத்தின் சுதந்திரமும் இறையாண்மையும் இல்லை. ரயில்வே வாரியத்தின் சுதந்திரம் இழக்கப்படுகிறது. வாரியத்தின் செயல்பாட்டு சுயாட்சி இழக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் தன்னாட்சி பெறாவிட்டால் ஒரு நவீன ரயில்வே அமைப்பைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்றால், முடிவெடுக்கும் சுதந்திரத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், வளர்ந்த நாடாக இந்தியா மாறப்போவதில்லை’’ என்றார்.
சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), முன்மொழியப்பட்ட சட்டம் 1890 மற்றும் 1905 சட்டங்களை ரத்து செய்கிறது. 1905 சட்டத்தின் விதிகள் 1989 ரயில்வே சட்டத்தில் செருகப்பட்டுள்ளன.
(19)89ம் ஆண்டின் முழுச் சட்டத்தையும் ரயில்வே அமைச்சர் மறுபரிசீலனை செய்து, அதில் திருத்தங்களைச் செய்து, பின்னர் அந்த மசோதாவை ஆய்வுக்காக ஒரு பொருத்தமான குழுவிற்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. அரசாங்கம் ஒரு நிலைக்குழு அல்லது, ஒரு தேர்வுக் குழுவிலிருந்து ஏன் விலகிச் செல்கிறது? என்று கேட்டார்.
மனோஜ் ஜா( ஆர்ஜேடி) உறுப்பினர்கள் மசோதாவைப் பற்றி பேசுவதை விட ரயில்வேயின் நிலைமை குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள். பீகார் மாநிலத்தில், ஷ்ரம்சக்தி, ஷ்ரம்ஜீவி, ஜன்சதாரன் போன்ற ரயில்களின் பெயர்கள் – அங்குள்ள நிலைமையை பிரதிபலிக்கின்றன. எங்கள் மாநிலத்துக்கு இன்னும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்று கூறினார்.
பிரகாஷ் சிக் பராய்க் (திரிணாமுல் காங்கிரஸ்) இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். ரயில்வே கட்டண உயர்வு குறிப்பாக பிரீமியம் தட்கல் முறையில் அதிகமாக உள்ளன. சில நேரங்களில் விமான டிக்கெட்டுகளை விட அதிகமாக உள்ளது. இதனால் ஏழைகள் திடீர் பயணத்தைத் திட்டமிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றார்.
சந்தோஷ்குமார்(இந்திய கம்யூனிஸ்ட்)ரயில்வேயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் 15 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த சுபாஷ் பராலா(பாஜ) ரயில்வே செயல்பாட்டை மிகவும் சீராகவும் வெளிப்படையாகவும், பொறுப்புணர்வுடனும் மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம். அனைத்து மண்டலங்கள் மற்றும் பிரிவு மேலாளர்களுக்கு அதிக சுயாட்சி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படும் என்றார்.
The post புதிய மசோதா மூலம் ரயில்வே வாரியத்தின் கட்டுப்பாட்டை அரசே எடுக்க முயற்சி: மாநிலங்களவையில் எம்பிக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.