புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காலாப்பட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த 12ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் வடமாநில மாணவியிடம் உள்ளூரை சேர்ந்த சில இளைஞர்கள் அத்துமீறிய சம்பவம் நடந்தது. மாணவி தன்னுடன் படித்த மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் அவர்களை படம் எடுத்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட மாணவிக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வடமாநில மாணவியை இளைஞர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த மாணவி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி புகார் தரவில்லை. அதேநேரத்தில் இது தொடர்பான தகவல் வெளியானது. புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
The post புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. சட்டசபையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் appeared first on Dinakaran.