டெல்லி: பெங்களூருவில் வரும் 18 முதல் 20ம் தேதி வரை பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அப்போது புதிய தேசிய தலைவரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் கடந்தாண்டு ஜனவரியுடன் முடிவடைந்தது. எனினும் மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதுவும் கடந்த ஜுன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர் பாஜக தேசிய தலைவராக தொடர்கிறார். அதேநேரம் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து வருகிறார். பாஜகவின் கொள்கைபடி ஒருவருக்கு, ஒரு பதவி என்ற நிலையில், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே நாடு முழுவதிலும் மண்டலத் தலைவர்கள், பிறகு பாதி மாநிலங்களில் தலைவர் பதவிக்கான தேர்தலை பாஜக நடத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 18 முதல் 20 வரை பெங்களூருவில் நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கூறினர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘பெங்களூருவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘மிஷன் சவுத்’ (ெதன்மாநிலத்தில் ஆட்சி அமைத்தல்) திட்டத்திற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தென்மாநிலங்களை நோக்கிய தேர்தல் உத்திகள் வகுக்கப்படும். தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் பாஜகவின் தளத்தை மேலும் வலுப்படுத்த அங்கு தேசிய செயற்குழு கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கூட்டத்தில் புதிய தேசிய தலைவரை அறிவிக்க வாய்ப்புள்ளது. புதிய தேசிய தலைவர் தென்மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண் தலைவர் ஒருவரின் பெயர் அடிபடுகிறது. அவர்களில் ஆந்திரப் பிரிவுத் தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரியின் பெயர் உள்ளது. அதேநேரம் ஒன்றிய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டார், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான். டாக்டர் சுதா யாதவ், வினோத் தவ்டே, தருண் சக், அருண் குமார், சர்பானந்த சோனோவால், கிரண் ரிஜிஜு, சஞ்சய் ஜோஷி, ராம் மாதவ் போன்ற தலைவர்களின் பெயரும் பரிசீலனையில் உள்ளது’ என்றனர்.
The post பெங்களூருவில் 18 முதல் 20ம் தேதி வரை பாஜக தேசிய செயற்குழு கூட்டம்?: புதிய தலைவரை அறிவிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.