கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த அடுத்தநாளே(ஆக.10) தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அப்போதைய முதல்வர் சந்தீப் கோஷூம் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 66 நாள்களுக்கும் மேலாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த சனிக்கிழமை(18ம் தேதி) தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா சியால்டா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரங்கள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சியால்டா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனையை எதிர்த்து மேற்குவங்க அரசு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேற்குவங்க அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், “பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசு மேல்முறையீடு appeared first on Dinakaran.