பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனகோட்ட பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று நிறைவடைந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மற்றும் கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி என 2 கட்டமாக நடக்கிறது.
2வது முறையாக மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடத்த முடிவு செய்யப்பட்டு, அப்பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களிலும், நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி கடந்த 24ம் தேதி துவங்கியது. மலைப்பாங்கான இடம், நீர்நிலை, வன எல்லைபகுதிகளில் வரையாடு கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணியில் ஈடுபட்டவர்கள், நவீன பைனாகுலர் மூலம் வெகுதூரத்தில் செல்லும் வரையாட்டை துள்ளியமாக பார்வையிட்டு கணக்கெடுத்தனர்.
இப்பணி நேற்றுவுடன் நிறைவு பெற்றது. கணக்கெடுப்பு பணியில் நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். வனத்துறையினர் தனித்தனி குழுக்களாக சென்று வரையாடு கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 4 நாட்களாக கணக்கெடுப்பு குறித்து, விரைவில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வரையாடு கணக்கெடுப்பு பணி நிறைவு appeared first on Dinakaran.