அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் உண்மைக்கு முரணான போலியான அறிவியலும் வளர்ந்துவருகிறது. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் போலியான தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரும் போக்கு அதிகரித் துள்ளது. ஒரு நோய் பரவுகிறது என்றால், அந்த நோய் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதனால் அந்த நோய் ஏற்படுகிறது, அந்த நோயைத் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உண்மைத் தரவுகளின் அடிப்படையில் நோயை அணுகுவது அறிவியல்.
ஆனால், போலி அறிவியல் மூட நம்பிக்கைகளால் கட்டமைக்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதே போலி அறிவியல். அதாவது, பகுத்தறிந்து ஒரு செய்தியைத் தெரிவிக்காமல், குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்த முயல்வதே போலி அறிவியல். மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் உண்மைத் தரவுகளை மழுங்கடிக்கும் வேலையைச் செய்கிறது போலி அறிவியல்.