டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 30க்கும் அதிகமானோர் பலியான விவகாரத்தில் அம்மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரிஉச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பக்தர்களின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். விஜபி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்நிலையில், இந்த மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் மற்றும் கவலைக்குரிய விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்றார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் விஷால் திவாரி அலகாபாத் ஐகோர்ட்டை நாடுமாறு கேட்டு கொண்டார்.
The post “மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்”: வழக்கு தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!! appeared first on Dinakaran.