திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். நேற்று வரை கடந்த 40 நாட்களில் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நாளை மாலை சன்னிதானத்தை அடைகிறது. இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
அன்று இரவுடன் இந்த வருட மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலையில் நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு நாளை முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தங்க அங்கி சபரிமலைக்கு வருவதால் நாளை மதியம் முதல் மாலை வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 26ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
The post மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாள் சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.