போபால்: மத்தியப் பிரதேச பிராமண அமைப்பின் தலைவர் விஷ்ணு ரஜோரியா. இவர் மபி அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பரசுராம் கல்யாண் போர்டு என்ற பிராமண நலவாரியத்தின் தலைவராக உள்ளார். இதனால் மபி பா.ஜ அரசு இவருக்கு மாநில கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கி உள்ளது. இவர் இந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது நான்கு குழந்தைகளை பெறும் இளம் பிராமண தம்பதிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் விஷ்ணு ரஜோரியா பேசியதாவது: மதவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நாங்கள் பெரும்பாலும் எங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டோம். இருப்பினும் பிராமண இளைஞர்களிடம் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதை முதியவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. கவனமாகக் கேளுங்கள், வருங்கால சந்ததியின் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. இளைஞர்கள் திருமணமானதும் ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகிறார்கள். இது மிகவும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
எனவே நான் உங்களை கேட்டுக்கொள்வது எல்லாம் நீங்கள் குறைந்தது நான்கு குழந்தைகளை பெற வேண்டும். நான்கு குழந்தைகளுடன் இருக்கும் தம்பதிகளுக்கு பரசுராமர் வாரியம் சார்பில் தலா ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும். இந்த வாரியத்திற்கு நான் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசு கொடுக்கப்படும். கல்விக்கு இப்போது அதிக நிதி செலவழிக்க வேண்டியது உள்ளது என்று இளைஞர்கள் என்னிடம் அடிக்கடி கூறுகிறார்கள். எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள், ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் தாமதிக்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். மபி அரசின் கேபினட் பதவியில் இருக்கும் விஷ்ணு ரஜோரியாவின் பேச்சு சர்ச்சையானதால் அவர் மீண்டும் கூறுகையில்,’ இது எனது தனிப்பட்ட பேச்சு. அரசின் கருத்து அல்ல. இது எனது சமூகத்தில் பேசியது. எனது சமூக திட்டத்தில் வெளியிடப்பட்டது’ என்றார்.
The post மபியில் தான் இந்த பிரசாரம் 4 குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு: பிராமண நலவாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.