டெல்லி: மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டி அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர இந்தியா கூட்டணி தலைமையிலான எதிர்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் அதானி நிதி முறைகேடு விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது தவிர டெல்லியில் நிலவும் சட்டம் ஒழுங்கு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் விதிஎண்-267-ன் கீழ் தொடர்ச்சியாக நோட்டூஸ்களை கொடுத்தாலும் அவற்றை எல்லாம் ஏற்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறார். இன்றும் கூட ஆளும் கட்சியான பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் மீது சில குற்றசாட்டுகளை முன்வைத்தது. அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கும் தொடர்புள்ளது. இது குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என பாஜக எம்பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை மாநிலங்கவை முன்னவர் ஜே.பி.நட்டாவும் ஆதரித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக இந்த அவையை நடத்த விடக்கூடாது என்று முடிவு செய்துவிட்டது. பாஜக ஜனநாயகத்தை கொலைசெய்துவிட்டது என விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதேபோல் ஜெய்ராம் ரமேஷ், வேண்டும் என்றே அரசு இதுபோன்ற ஒரு விளையாட்டை விளையாடுகிறது. அதற்கு மாநிலங்களவை தலைவரும் இறையாகிறார் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் இது போன்று காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எம்பிக்களுக்கு அவைத்தலைவர் பேசுவதற்கு அனுமதி வழங்குகிறார். எனது வாழ்க்கையில் இது போன்று ஒருதலைபட்சமாக செயல்படும் மாநிலங்களவை தலைவரை நான் பார்த்ததே இல்லை என குற்றம்சாடினார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். எதிர்கட்சியினருக்கு அவர் மதிப்புகொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் appeared first on Dinakaran.