டெல்லி: மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்தனர். அதனை தொடர்ந்து தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான், கனிமொழி எம்.பி.யிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி; தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்று கூறியது வருத்தமளிக்கிறது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டு, என்னை விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை.
மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார்.
The post மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.