அது ஒரு வழக்கமான விடுமுறைக் காலை நான் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றிருந்தேன். டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது, அங்கு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். அந்த அமைதியான, அசையாத வடிவமும், அதில் மெல்லச் சுழலும் இரண்டு முட்களும், மின்னல்போல என் மனதைத் தாக்கின. ஆம்! சக மனிதனால் உருவாக்கப்பட்ட சிறிய இயந்திரம் நமக்கு நேரத்தை, காலத்தைக் காட்டுகிறது.
நம் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தின் பொருள்தான் என்ன? காலப் பகுப்பின் வசதிக்காகப் பிறந்த இந்த அருவமான கருத்துரு, நம் வாழ்வின் மீது அமைதியாக ஆதிக்கம் செலுத்தி ஆளத் தொடங்கியது எப்படி? உண்மையில், நேரம் என்பது ஈர்ப்புவிசை போல இயற்கையின் விதி அல்ல. இது மனிதனின் கண்டுபிடிப்பு. சமூகத்தின் செயல் பாடுகளில் ஒரு ஒழுங்கு நிலவ, இயற்கையின் சுழற்சியிலிருந்து நாம் அதைக் கண்டுபிடித்தோம்.