டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது;
அணை பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என கேரள அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல், அணையை பாதுகாக்க நிபுணர்கள் அமைக்க வேண்டும் என கேரள அரசு இங்கே கூறுகிறது என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது. மேலும் ஆய்வு நடத்தலாம். ஆனால், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, மீண்டும் மீண்டும் அதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக வழங்கியுள்ள 2 தீர்ப்புகளையும் ஆய்வு செய்யத் தேவையே இல்லை என கேரள அரசுத்தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர்.
அணையை பலப்படுத்தும் வழக்கை மட்டும் இங்கு விசாரிக்கலாம். அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணை கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா அல்லது அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் கருத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 3வது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
The post முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.