மிர்சாபூர்: மிர்சாபூர் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து சிஆர்பிஎப் வீரரை தாக்கிய ‘கன்வர்’ பக்தர்கள் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் ‘கன்வர்’ யாத்திரை என்பது ஒவ்ெவாரு ஆண்டும் சிவபெருமானின் பக்தர்களால் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரையாகும். இந்த யாத்திரையின்போது, பக்தர்கள் புனித கங்கை நீரைக் குடங்களில் (கன்வர்கள்) ஏந்தியபடி, கால்நடையாகப் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள். இந்த யாத்திரை, இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்தில், பிரம்மபுத்திரா மெயில் ரயிலைப் பிடிப்பதற்காக வந்திருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை பக்தர்கள் சிலருக்கும் இடையே ரயில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காவி உடை அணிந்திருந்த பக்தர்கள் குழுவாகச் சேர்ந்து, அந்த வீரரைக் கீழே தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், தாக்குதலில் ஈடுபட்ட கன்வர் யாத்திரை பக்தர்கள் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து சிஆர்பிஎப் வீரரை தாக்கிய ‘கன்வர்’ பக்தர்கள்: 7 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.