புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணி புரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுகின்றனர். இந்தியாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தன்னார்வலர்களாக ரஷ்ய ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 12 இந்தியர்கள் பலியாகி விட்டதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அதிகாரி ரன்தீர் ஜெய்ஸ்வால், “தற்போதைய நிலவரப்படி ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணி புரிகின்றனர். அவர்களில் 12 பேர் உயிரிழந்து விட்டனர். 96 பேர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டனர். இன்னும் 18 பேர் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். மேலும் 16 இந்தியர்கள் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை. அந்த 16 பேரையும் காணவில்லை என ரஷ்யா வகைப்படுத்தி உள்ளது. மீதமுள்ளவர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று இவ்வாறு தெரிவித்தார்.
The post ரஷ்ய ராணுவத்தில் பணி புரிந்த 12 இந்தியர்கள் பலி: 16 பேர் மாயம், ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.