வாரணாசி: அமெரிக்காவில் ராமர் பற்றி பேசிய ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு பிரவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, “புத்தர், குருநானக், மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், கர்நாடகாவின் பசவர், கேரளாவின் நாராயண குரு, ஜோதிராவ் புலே உள்ளிட்டவர்கள் யாரும் மதவெறியர்கள் அல்லர். நமது கற்பனையான புராண கதாபாத்திரமான ராமரும் அப்படித்தான். ராமர் மன்னிக்கும், கருணை உள்ளம் கொண்டவர்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராமரை கற்பனை கதாபாத்திரம் என வர்ணித்த ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே புகாரளித்துள்ளார். அந்த புகாரில், “ராமர் பற்றிய ராகுலின் பேச்சு சனாதனிகளின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமான வெறுப்பு பேச்சு. இதற்காக ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். இது குறித்து வரும் 19ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
The post ராமர் கற்பனையான புராண கதாபாத்திரம் என பேச்சு; ராகுல் மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகார் appeared first on Dinakaran.