புதுடெல்லி: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது சட்டமாக நடைமுறையில் உள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ் ஆகியவை உட்பட உச்ச நீதிமன்றத்தில் 12க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் த.வெ.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்பெப்பெற வேண்டும் என்று எங்களது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தற்போது பதிவாளர் அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ளது. எனவே இதே கோரிக்கைகள் கொண்டு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு எங்களது மனுவையும் இணைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் நாளை(இன்று) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உத்தரவிட்டார்.
The post வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை appeared first on Dinakaran.