டெல்லி : வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதனிடையே வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் ஜாமின் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன அதிகாரி உட்பட அனைவருக்கும் ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன்,வழக்கில் குற்றவாளிகள் யார் யாருக்கு என்னென்ன விதமான தண்டனைகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சிபிஐ தரப்பில் இருந்து தங்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள், தண்டனை விவரங்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஒரு Chart வடிவில் தயார் செய்து, சிபிஐ இரண்டு வாரத்தில் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதேப்போன்று உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.