புனே: புனேயில் விலை உயர்ந்த காரில் சென்று கொண்டே போக்குவரத்து சிக்னலில் சிறுநீர் கழித்துவிட்டு ஆபாச சைகை காட்டிய வீடியோ வைரலானதால் இருவர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் யெரவாடா பகுதியின் வழியாக சென்ற பிஎம்டபிள்யூ காரை கவுரவ் அஹுஜா (25) என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் நண்பர் பாக்யேஷ் ஓஸ்வால் (22) என்பவரும் அந்த காரில் பயணித்தார். புனே நகரின் முக்கிய போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியான சாஸ்திரி நகர் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காரை கவுரவ் அஹுஜா நிறுத்தினார்.
பின்னர் திடீரென கீழே இறங்கிச் சென்று போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள பகுதியில் சிறுநீர் கழித்தார். அதனை காரில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே பாக்யேஷ் ஓஸ்வால் வேடிக்கை பார்த்தார். பின்னர் இருவரும் அந்த காரில் மீண்டும் பயணித்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து புனே போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுரவ் அஹுஜா, பாக்யேஷ் ஓஸ்வால் ஆகியோரை தேடி வந்தனர். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இருவர் மீதும் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல், பொது சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது.
அஹுஜா போக்குவரத்து சிக்னல் பகுதியில் சிறுநீர் கழிக்கும் போது, ஓஸ்வால் சொகுசு காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். இவர்களின் செயலை வீடியோ எடுத்த ஒருவரை நோக்கி, ஆபாசமான சைகை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் காரில் சென்றுள்ளனர். கைதான இருவரும் புனேவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் ஏதேனும் போதைப்பொருள் உட்கொண்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த 2 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடியோ வைரலானதால், அஹுஜா தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். அதனையும் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை’ என்று கூறினர்.
The post விலை உயர்ந்த காரில் சென்று கொண்டே போக்குவரத்து சிக்னலில் சிறுநீர் கழித்துவிட்டு ஆபாச சைகை: வீடியோ வைரலானதால் இருவர் கைது appeared first on Dinakaran.