கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள உம்ராங்சோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சோ பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 9 தொழிலாளர்கள் அதில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பதிவில்,‘உம்ராங்ஷுவில் இருந்து துயரமான செய்தி வந்துள்ளது. அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். கங்கா பகதூர் ஷ்ரத், ஹுசைன் அலி, ஜாகிர் ஹுசைன், சர்பா பர்மன், முஸ்தபா சேக், குஷி மோகன் ராய், சஞ்சித் சர்க்கார், லிஜான் மகர் மற்றும் சரத் கோயாரி என தெரியவந்துள்ளது. மேலும், சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்று தெரிவித்துள்ளார்.
The post அசாம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.