புதுடெல்லி: ராஜஸ்தானின் புகழ் வாய்ந்த அஜ்மீர் தர்கா, இந்துக்களின் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அஜ்மீர் சிவில் ஷெஷன்ஸ் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீரில் சூபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஷ்தியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வருகை புரிவது வழக்கம். இந்த தர்காவானது அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாகப் புகார் உள்ளது. ராஜஸ்தானின் முதல்வராக காங்கிரஸின் அசோக் கெல்லாட் இருந்தபோது இந்த புகார் அளிக்கப்பட்டது. இதை இந்துத்துவா அமைப்பான மஹராணா பிரதாப் சிங் சேனாவின் அப்போதைய தேசியத் தலைவரான ராஜ்வர்தன் சிங் பார்மர் கடந்த மே, 2022-ல் அளித்திருந்தார். அதில் ராஜ்வர்தன் சிங், தர்காவினுள் களஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.