புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சியில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ம் தேதி தேசிய குடிமைப்பணி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த தேசிய குடிமைப் பணி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது: இன்று அரசு வகுக்கும் கொள்கைகள், எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் கூட்டு முயற்சி, உறுதி முக்கியம். இதற்கு அரசு அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அயராது உழைக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் அதிகாரிகளும், பணி செயல்முறைகளும், கொள்கை உருவாக்கமும் காலாவதியான கட்டமைப்பில் செயல்பட முடியாது. புதிய முடிவுகளை அடைவதற்கு புதிய அணுகுமுறைகள் அவசியம். ஏழைகளின் பிரச்னைகளை உணர்ந்து, அவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கியிருக்கக் கூடாது. இவ்வாறு கூறினார்.
The post அடுத்த 1000 ஆண்டுகளை நிர்ணயிக்கும் அரசின் கொள்கைகளை நிறைவேற்ற பாடுபடுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.