ரேபரேலி: அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்னை இல்லை என்றும் நாட்டின் பிரச்னை என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி எம்பியுமான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தனது இரண்டு நாள் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று 1857ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் நாயகனான வீர பாசியை கவுரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். முன்னதாக பூமாவில் உள்ள தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்களை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது தலித்துக்கள் தொடர்பான பிரச்னை உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து தொண்டர்கள் ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். பின்னர் தொண்டர்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி, கட்சியின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் 2027ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராக வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி கமிட்டி துணைத் தலைவர் சர்வோத்தம் குமார் மிஸ்ரா, ‘‘ராகுல்காந்தியின் தலைமை பாராட்டுக்குரியது. அவரது நேர்மை, தொலைநோக்கு மற்றும் பணி நெறிமுறைகள் விவரிக்க முடியாதவை. கட்சித்தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துக்களை கவனமாக கேட்ட ராகுல்காந்தி, அவர்களின் கவலைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்” என்றார்.
மேலும் காங்கிரஸ் ரேபரேலி எஸ்சி பிரிவு தலைவர் சுனில் குமார் கவுதம் தலைமையில் எஸ்சி சமூகத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட குழு ராகுலை சந்தித்து பேசினார்கள். எஸ்சி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. மேலும் மாநிலத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் ராகுலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்னை என்றும் இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறியிருந்தார். நரேந்திரமோடி ஜீ இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும். உத்தரப்பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. ஒன்றிய அரசு தனியார்மயமாக்கலை நாடுகின்றது. உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல. என்ஜினே இல்லாத அரசாகும்” என்றார்.
The post அதானி பிரச்னை தனிப்பட்டது இல்லை; நாட்டின் விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.