புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், ஒன்றிய அரசின் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது டிரம்ப் கூறுகையில், ‘மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது’ என்றார். முன்னதாக டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். ஏற்கனவே டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது. இருவரும் கடந்த 2019 செப்டம்பரில் ஹூஸ்டனிலும், 2020 பிப்ரவரியில் அகமதாபாத்திலும் நடந்த இருவேறு கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றினர். கடந்த 2024 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்ற மகத்தான வெற்றிக்கு பிறகு அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார். மேற்கண்ட தகவல்களின்படி பார்த்தால், பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இருந்தாலும் ஒன்றிய அரசின் தரப்பில் மோடி அமெரிக்கா செல்வது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
The post அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்?: டிரம்பின் பேட்டியால் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.