புதுச்சேரி: அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர் என்று புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''சாதி, மத, மொழி ரீதியாக மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற, தேசிய சிந்தனையுடைய அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர். திமுக முதல்வரின் பிணாமியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் எங்களது கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சாபம் இடுகிறார்.