அந்தமான் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்னும் பெயரில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’ கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 166 ச.கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், பழங்குடி உரிமைச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட் நிகோபார் தீவு வளம் மிக்க வெப்பமண்டல மழைக்காடுகள், அரியவகைப் பல்லுயிர்களின் குடிலாகும். இந்தக் காடுகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இம்மண்ணின் மைந்தர்கள் ஷோம்பென், நிகோபார் ஆதிக்குடிகள்.