ஆரோக்கியம், கட்டுரை, சுற்றுப்புறம், தமிழ்நாடு, மருத்துவம்

எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’

என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is Godliness’ என கூறுவர். தன்னையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் இறைத்தன்மை உள்ளவர்கள்.

தனிமனித சுகாதாரக் கேடு : சமுதாய சுகாதாரக் கேடாக மாறி, ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும் சக்தி வாய்ந்தது. அதனால் புதுபுது பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாவதற்கு காரணமாகி, புதுபுது நோய்கள் வர காரணமாகிறது. அதுமட்டுமல்லாமல் நோய்
களின் வீரியத்தன்மையும் அதிகரிக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கொசுவால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் தான்.சாதாரணமாகவே நமது உடலுக்குள்ளும், உடலுக்கு வெளியேயும் நாம் சுவாசிக்கும் காற்றில் எண்ணற்ற கிருமிகள் உண்டு. எவ்வளவு கிருமிகள் இருந்தாலும் நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி, எந்த கிருமியாலும் நமக்கு பாதிப்பு ஏற்படாமல்
பாதுகாக்கிறது.

எச்சில் துப்பினால் : உதாரணமாக கண்ட இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதனால் விளையும் தீமைகளை பார்ப்போம். நம் உடல் பாகங்களில் அதிக அளவு கிருமிகள் கொண்டது வாயும், வாயிலிருந்து வரும் உமிழ்நீரும் தான். வாயில் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன. ஒருவர் எச்சிலை துப்பும் போது, அடுத்த சில நிமிடங்களில், அந்த எச்சிலின் மீது மற்றொருவர் கால் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நடக்கும் போதும் பல்வேறு இடங்களுக்கும் செல்லும் போதும் அந்த எச்சிலில் உள்ள அனைத்து கிருமிகளையும் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்கிறார். துப்பிய எச்சிலின் மீது ஒருவருடைய கைக்குட்டையோ, பேனாவோ, பென்சிலோ அன்றாடம் பயன் படுத்தும் அலைபேசியோ விழுந்து விட்டது என்றால் அந்த கிருமிகள் எல்லாம் அந்த பொருளுக்கு மாறிவிடுகிறது. அதை நாம் பயன்படுத்தினால் அது கிருமிகளாகி நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

துப்பிய உமிழ்நீர் யாரும் மிதிக்காவிட்டால் கூட, அது கிருமிகளாக வளரும். ஈ, கொசு போன்றவையும் நோய்களை பரப்புகின்றன. கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் இவ்வளவு பாதிப்பு என்றால் கண்ட இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

கெட்டுப்போன உணவு : கெட்டுப்போன உணவு உண்ணக்கூடாது. கெட்டுப்போன உணவை தகுந்த முறையில் குப்பையில் போட்டு அதை அப்புறப்படுத்த வேண்டும்.வீட்டின் ஒரு மூலையிலோ, தெருவிலோ துாக்கிப்போடும் போது, அது கிருமிகள் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. நாம் சாப்பிடும் பாத்திரத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அசுத்தத்தில் இருந்து பிறந்து அசுத்தத்தில் வளரும் ‘ஏடிஸ்’ கொசுவால் ஏற்படும் கொடுமையான அரக்கனே டெங்கு வியாதி.

தகாத உறவு கொள்வதால் எய்ட்ஸ் நோய் வருவது தனிமனித ஒழுங்கீனம் என்றால், சுத்தமில்லா சூழ்நிலையை உருவாக்குவதும் தனிமனித ஒழுங்கீனம் தான்.

1) உங்கள் சுற்றுப்புறத்தையும், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவும் போது நல்ல நீரினால் கழுவ வேண்டும். கழுவிய நீரை தேக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
3) சாப்பிடும் பண்டங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். பழம் மற்றும் காய்கறிகள் நறுக்கும் கத்திகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4) எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் குப்பைக்கூடைகள் திறந்து இருக்கக் கூடாது. மூடியே இருக்க வேண்டும். முக்கியமாக நமது உடை சுத்தமான
உடையாக இருக்க வேண்டும்.
5) சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் கையை நன்கு கழுவ வேண்டும்.
6) இருமல், தும்மலின் போது கைக்குட்டையை உபயோகப்படுத்த வேண்டும்.
பொறுப்புணர்வு ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்வதால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. ஒவ்வொரு குடிமகனும் தமது பொறுப்பை உணர்ந்து, சுத்தம் என்பது நம் உயிருடன் கலந்து கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம் என்பதை உணர வேண்டும்.
பழைய பொருட்கள் மற்றும் தேவையில்லா பொருட்களை அடைத்து வைத்து அதில் தண்ணீரும் இருந்தால் அது ஒரு உயிரிழப்புக்கு காரணமாக அமையும் என்பதை உணர வேண்டும். உணர்வது மட்டும்அல்லாமல் அப்புறப்படுத்த
வேண்டும்.
நாம் வசிக்கும் தெருக்கள் மற்றும் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடிக்கும் கொசுக்களுக்கு ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு தெரியாது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படலாம். இந்த பொது நலத்தில் சுயநலம் அடங்கியுள்ளது. சுயநலத்தில் பொதுநலமும் அடங்கியுள்ளது.
உங்கள் அருகிலுள்ள நீர் தேங்கிய டயரையோ, பூந்தொட்டியோ
அப்புறப்படுத்துவதால் உங்களால் ஓர் உயிர், டெங்கு காய்ச்சலில் இருந்து காப்பாற்றப்படுகிறது என நினையுங்கள். எனவே நீங்கள் கடவுளாகிறீர்கள். தனிமனித ஒழுக்கம், தனிமனித சுகாதாரம் ஆகியவை நாட்டின் சுகாதாரமாக வளர்ந்து நம் நாடு வளமாக உதவும்.
ஏடிஸ் கொசு வளரும் இடங்கள் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப், தேங்காய் மட்டைகள், தேங்காய் சிரட்டை, காலி பாட்டில்கள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் கேன்கள், பாக்கெட், வாழைப்பழத்தோல்கள், டயர்கள், பூந்தொட்டிகள்.
சுற்றுப்புற சூழ்நிலை சுத்தமாக இருந்தால், 90 சதவீதம் தொற்று நோய்
தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். எல்லா வீட்டிலும் இருக்கும் ஈ, 65க்கும் மேற்பட்ட நோய்களை பரப்புகிறது. அதில் முக்கியமானவை காய்ச்சல், வயிற்று கடுப்பு, வயிற்றுபோக்கு, கண் எரிச்சல், ஆந்தராக்ஸ் மற்றும் காசநோய் ஆகியவை. ஈயின் மேல் உள்ள ரோமம் மற்றும் கால்கள்
கிருமிகளை பரப்புவதற்கு உதவுகின்றன.
ஈ, உணவில் உட்காரும் போது ஈயில் உள்ள உமிழ் நீர் அந்த திட உணவை, திரவ நிலைக்கு மாற்றுகிறது. ஈ-யில் உள்ள கிருமிகள் அந்த உணவுக்குள் செலுத்தப்படுகிறது. முக்கியமாக சிறுநீர் மற்றும் மலத்தில் உட்காரும் ஈ, நோய்களை பரப்புவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குப்பை கூடைகளை மூடி வைப்பதன் மூலமும், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமும் ஈக்களிலிருந்து வீடுகளை பாதுகாக்கலாம். ஈயால் பரப்பப்படும் நோய்கள் குணப்படுத்தகூடியவைதான். இருந்தாலும்
அன்றாட வாழ்க்கையில் சுத்தம், சுகாதாரம் பேணினால் நோய்கள் நம்மை அண்டாது.
கொசுவால் பரப்பப்படும் வியாதிகள்மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மலேரியா, சிக் குன் குனியா,  ‘ஜப்பானிஸ்’ எனப்படும் மூளைகாய்ச்சல், யானைக்கால் நோய். முக்கியமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஈடிஸ்’ கொசு பகலில் தான் கடிக்கிறது. வீட்டில் இருக்கும் போது ‘சாட்ஸ்’ எனப்படும் அரைடவுசர் அணியும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
எங்கு சென்றாலும் முழுக்கால் சட்டை மற்றும் முழுக்கை சட்டை அணிய வேண்டும். கால் உறை அணிந்து, ஷூ அணிந்தால் நல்லது. விடுதியில் தங்கும் ஆடவர், மகளிர் அரைக்கால் சட்டை அணிவதையே விரும்புகின்றனர். ஆனால் அதை அணியக் கூடாது.
‘கொசுவின் காதல் முத்தம்!
எங்கும் சாதல் சத்தம்!
தேவை எங்கும் சுத்தம்!
இணைந்து வெல்வோம்
டெங்கு யுத்தம்!’
-டாக்டர் ஜெ.சங்குமணி
மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *