புதுடெல்லி: அனல் தெறிக்கும் அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில்,தொகுதி மறுசீரமைப்பு. வாக்காளர் பட்டியலில் முறைகேடு, டிரம்பின் வரி மிரட்டல், மணிப்பூரில் மீண்டும் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அமளிக்கு பஞ்சமிருக்காது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டமாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடந்தது. இதில் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், மானிய கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுதல், பட்ஜெட் செயல்முறையை முடித்தல், மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கோருதல் மற்றும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுதல் ஆகிய 4 விஷயங்களில் அரசு கவனம் செலுத்த உள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதல் மெய்தி, குக்கி இனத்தவர்கள் இடையே வன்முறை நீடித்து வரும் நிலையில், அம்மாநில பாஜ முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவை கூடும் முன்பாக மணிப்பூர் முதல்வர் பதவி விலகியதால், மணிப்பூருக்கான மாநில பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மேலும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அறிவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கேட்கும் சட்டப்பூர்வ தீர்மானத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவும் கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, வக்பு மசோதா முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என்பதால், அதை விரைவில் நிறைவேற்றுவதில் அரசு ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதாவுக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழு ஆய்விலும் எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் பாஜ எம்பிக்களின் திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு புதிய திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
எனவே வக்பு வாரிய மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பதற்கு தயாராக உள்ளன. இந்த மசோதா தாக்கல் செய்வது கடும் அமளிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ஒரே மாதிரி வாக்காளர் அட்டை எண் விவகாரத்தை எழுப்புவதிலும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் வெளிமாநிலத்தவர்கள் வாக்களிக்கும் வகையில் பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அட்டை எண் வழங்கப்பட்டிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது. ஆதாரத்துடன் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதும், இதை ஒப்புக் கொண்ட தேர்தல் ஆணையம் 3 மாதத்தில் சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளதோடு, பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இப்பிரச்னையை எழுப்ப காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டி உள்ளன. இதைத் தவிர, வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஒன்றிய அரசு கையாளும் விதம், மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை, மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட உள்ளன.
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என அதிபர் டிரம்ப் கூறியிருக்கும் தகவல் இந்திய அரசியலில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளிக்கு பஞ்சமிருக்காது.
வக்பு வாரிய மசோதா கூட்டாக எதிர்க்கப்படும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வக்பு வாரிய மசோதாவை கூட்டாக எதிர்க்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விரிவான ஆலோசனை நடத்துவார்கள். வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ள பிரச்னையையும் நாங்கள் எழுப்புவோம். சூழ்ச்சிகளும், திரைமறைவு திட்டங்களும் வகுக்கப்படுவதால் தேர்தல்கள் இனி சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்க வாய்ப்பில்லை என எண்ணத் தோன்றுகிறது. மேலும், டிரம்பின் வரி அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தையும் அவையில் எழுப்புவோம்’’ என்றார்.
The post அனல் தெறிக்கும் அரசியல் சூழலில் பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: தொகுதி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் appeared first on Dinakaran.