திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சமீபத்தில் நடந்த திருப்பதி லட்டு கவுன்டரில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கூட்டநெரிசலில் 6 பேர் பலியான விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேவஸ்தானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் சஞ்சீவ்குமார் ஜிண்டால் இன்று திருமலைக்கு வந்து 2 நாட்களுக்கு தங்கி தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர மாநிலம் விஜயவாடா கன்னாவரத்தில் என்டிஆர்எப் புதிய வளாகத்தை இன்று திறந்து வைத்தார். இதற்காக நேற்றிரவு விமான நிலையம் வந்த அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண், அமைச்சர் லோகேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதற்கிடையில் நேற்று அமித்ஷாவை முதல்வர் தரப்பினர் சந்தித்து பேசினர். அப்போது, ஏழுமலையான் கோயில் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறித்து அமித்ஷாவிடம் சந்திரபாபு முறையிட்டார். அதன்பேரில் அடுத்த சில நிமிடங்களில் உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளரின் வருகையை ரத்து செய்வதாக ஒன்றிய உள்துறை அலுவலகம் தேவஸ்தானத்திற்கு தெரிவித்தது. இதற்கு சந்திரபாபு கொடுத்த அழுத்தமே காரணம் எனக்கூறப்படுகிறது.
ஒய்எஸ்ஆர் காங். குற்றச்சாட்டு
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் திருப்பதி முன்னாள் எம்எல்ஏவுமான கருணாகரரெட்டி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : திருப்பதியில் நடந்த கூட்டநெரிசல், தீ விபத்து குறித்து விசாரணைக்கு உள்துறை செயலாளர் வர இருந்த நிலையில் விஜயவாடாவுக்கு நேற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன்கல்யாணும் சாஷ்டாங்கமாக விழுந்துள்ளனர். தேவஸ்தானத்தில் உள்துறை செயலாளர் வந்து விசாரணை நடத்தினால் மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படும். எனவே, இந்த பயணத்தை ரத்து செய்யும்படி கேட்டு சரணாகதி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆய்வை உள்துறை அமைச்சகம் உடனடியாக ரத்து செய்துள்ளது. இந்த ஒரு சம்பவமே திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்தது என்பதற்கு உதாரணம் என்றார்.
The post அமித்ஷாவுக்கு சந்திரபாபு கொடுத்த அழுத்தம்..? திருப்பதி தீ விபத்து, பக்தர்கள் பலி விவகாரம் உள்துறை அதிகாரிகள் வருகை திடீர் ரத்து appeared first on Dinakaran.