புதுடெல்லி: முறையான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்பப்பெற தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமை காட்டி வருவதால் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்தியர்களும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளனர்.
எந்தவித ஆவணமும் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அவர்களை திரும்பப்பெற தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் இந்திய குடிமக்கள் அவர்களின் இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினால் அவர்கள் திரும்பவும் நமது நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள். ஏனெனில் இந்தியா சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரானது.
சட்டவிரோத குடியேற்றம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையது. எனவே இந்திய குடிமக்கள், அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ, முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு நாட்டில் தங்கியிருந்தால் அல்லது வசிப்பவர்கள், அவர்களின் குடியுரிமையை சரிபார்க்க தேவையான ஆவணங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நாங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வருவோம். சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் வர்த்தகம் இரண்டு தனித்தனி பிரச்சினைகள். சட்டவிரோத இடம்பெயர்வு குறித்த எங்களின் அணுகுமுறை, கொள்கை மற்றும் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
The post அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்ப பெறத் தயார்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.