புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இங்கிலாந்திடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டனில் உள்ள சாதம் அவுஸில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது வெளியே நின்றிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷமிட்டனர். தடுப்புகளை தாண்டி வந்த ஒருவர் இந்திய தேசிய கொடியை மிக ஆக்ரோஷத்துடன் கிழித்துள்ளார். ஜெய்சங்கரையும் தாக்க முயன்றார். இந்த சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இங்கிலாந்துக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,‘‘வெளியுறவு அமைச்சரின் வருகையின் போது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகளால் பாதுகாப்பு மீறல்கள் நடந்தது குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் எங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளோம். அவர்களின் மிரட்டல், அச்சுறுத்தல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் போலீசின் அலட்சியம் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும் அதன் நேர்மை குறித்த எங்கள் கருத்து, இந்த முறையும் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையைப் பொறுத்தது என்றார்
The post அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற சம்பவம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை: இங்கிலாந்திடம் இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.