அரசு கேபிள் டிவி சேவையைப் போல், தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களுக்கு ரூ.200 கட்டணத்தில் அரசு பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணைய வளர்ச்சியில் புதிய பாய்ச்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (TANFINET) மூலமாக 11,626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில், 53,334 கி.மீட்டர் தொலைவிற்கு இணைய வசதி ஏற்படுத்தும் பணிகள் 92 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் அரசு இணைய சேவை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அமைச்சர் அறிவித்துள்ளார். இல்லங்களில் இணைய சேவை அத்தியவாசிய தேவைகளின் பட்டியலில் இடம்பெற்று வரும் இந்த காலகட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.