புதுடெல்லி: அரசு இல்லத்தை காலி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியால் சர்ச்சை எழுந்துள்ளது.உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கடந்தாண்டு நவம்பர் 10 அன்று ஓய்வு பெற்றார். ஒன்றிய அரசு விதிகளின்படி, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஒருவர், ஆறு மாதங்கள் வரை வாடகையின்றி அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் தங்க அனுமதிக்கப்படுவார். ஆனால், சந்திரசூட் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த டெல்லி கிருஷ்ணா மேனன் மார்க் சாலையில் உள்ள பிரம்மாண்டமான பங்களாவிலேயே, ஓய்வுபெற்று சுமார் எட்டு மாதங்களாகத் தொடர்ந்து வசித்து வருகிறார். அவருக்குப் பின் பதவியேற்ற தலைமை நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணா மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அந்த அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு குடியேறாமல், தங்களது முந்தைய வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை தங்குவதற்கு சந்திரசூட் விடுத்த கோரிக்கை சிறிய வாடகை கட்டணத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், மே 31 வரை தங்குவதற்கு அவர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கை விடுத்ததால், நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 31ம் தேதி காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற நிர்வாகம் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு கடந்த 1ம் தேதி அன்று அதிரடியாக ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் இருந்து அந்த பங்களாவை தாமதமின்றி உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும். தற்போது நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளதால், இந்த பங்களா உடனடியாகத் தேவைப்படுகிறது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த சந்திரசூட், ‘எனது மாற்றுத்திறன் மகள்களின் சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சரியான வீடு தேடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு இல்லத்தில் அதிக காலம் தங்குவதில் எனக்கு விருப்பமில்லை. மாற்று இல்லத்தை எனக்கு தற்காலிகமாக அரசு ஒதுக்கியுள்ளது; அது பழுது பார்க்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் காலி செய்துவிடுவேன்’ என்று உறுதியளித்துள்ளார்.
The post அரசு இல்லத்தை காலி செய்வதில் தாமதம்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியால் சர்ச்சை appeared first on Dinakaran.