எந்த ஓர் இயற்கை நிகழ்வையும் இது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்டு, ஆராய்ந்து, பரிசோதனை செய்து, பல முறை சரிபார்த்து, துல்லியமாக இதனால்தான் ஏற்படுகிறது என்கிற முடிவை எட்டுவதுதான் அறிவியல் வழிமுறை. ஒருகாலத்தில் பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று கருதிவந்தனர். ஆனால், அது சரியல்ல என்று நினைத்த சில விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, சூரியனைத்தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்கிற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருதுகோள் இப்போது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இன்று இது சரியா, தவறா என்று ஆராயத் தேவையில்லை. அதேநேரம் யாரோ ஒருவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. சரி, உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். உங்களுக்குச் சிறுவர்களைவிட, சிறுமியர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று தோன்றுவதாக வைத்துக்கொள்வோம்.