மும்பை: அவுரங்கசீப் கல்லறை விவகாரத்தை தொடர்ந்து நாக்பூரில் நடந்த போராட்டத்தில், ஒரு மதத்தின் புனித நூலை எரித்ததாக தகவல் பரவியதால் பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை வீசி போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், தாக்குதலில் 34 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட சாவா இந்தி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
திரைப்படத்தின் காட்சிகளை வைத்து, மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப்புக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் பரப்பப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி எம்எல்ஏ அபு ஆஸ்மி, ‘‘அவுரங்கசீப் உண்மையில் சிறந்த நிர்வாகி. ஆனால், அவரைப் பற்றி தவறாக சித்தரித்து விட்டனர்’’ என்றார். இதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உடனடியாக கண்டித்தார். சட்டப்பேரவையிலும் இந்த பிரச்னை எழுந்தது. இதையடுத்து, அபு ஆஸ்மி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன்பிறகு, அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற சிலர் கூறினர். குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
இந்த கோரிக்கையை ஆதரிப்பதாக கூறிய முதல்வர் பட்நவிஸ் அதை சட்டப்பூர்வமாக செய்ய வேண்டும் என்றார். அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்துத்துவா அமைப்புகளும், ஆளும் கூட்டணியை சேர்ந்த சிலரும் குரல் எழுப்ப, விவகாரம் விஸ்வரூபமானது. அவுரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், பாபர் மசூதியை போன்று இடிக்கப்படும் என பஜ்ரங் தள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. கல்லறையை அகற்றவேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் போராட்டங்களை நடத்தின.
சில இடங்களில் அவுரங்கசீப்பின் படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது மராத்தா மன்னர் சம்பாஜியை புகழ்ந்தும், அவுரங்கசீப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. நாக்பூரில் நடத்த போராட்டத்தில் அவுரங்கசீப்பின் படத்தை எரித்தனர். அப்போது, ஒரு மதத்தின் புனித நூலை எரித்ததாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது.
சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். நாக்பூரில் சித்னிஸ் பார்க் மற்றும் மகால் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்தது. இதுபோல் கோட்வாலி மற்றும் கணேஷ் பீத்பகுதியிலும் இதுபோல் தகவல் பரவியது. இது தொடர்பாக கணேஷ் பீத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவுரங்கசீப் படத்தை மட்டுமே தாங்கள் எரித்ததாக பஜ்ரங்தள் அமைப்பினர் தெரிவித்தனர். மேற்கண்ட பகுதிகளில் அதிரடி படையினர், கலவரத்தை கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நாக்பூர் மகால் பகுதியில் சித்னிஸ் பார்க் அருகே நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஹன்சாபுரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மற்றும் 11.30க்கு இடையே கலவரம் மூண்டது. அங்கிருந்த கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகள் சூறையாடப்பட்டன. கிளினிக் ஒன்றும் கலவரக் காரர்கள் தாக்குதலில் சேதம் அடைந்தது. கலவரக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 3 போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 34 போலீசார் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த மாநில பாஜ தலைவரும் நாக்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சந்திரசேகர் பவான்குலே, தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாக்பூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சமூக வலைதளத்தை பயன்படுத்தி பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஆயினும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போலீசார் அரணாக நின்று தடுத்துள்ளனர். இதில் நடந்த கல்வீச்சில் தான் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை வைத்து உள்துறை தோல்வி அடைந்து விட்டதாகக் கூற முடியாது, என்றார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘‘சித்னிஸ்நகர், மோனின்புரா பகுதிகளில் 2,000 முதல் 3,000 பேர் கூடியுள்ளனர். அவர்கள்தான் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்களை மட்டுமின்றி, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்’’ என்றார். நாக்பூரை சேர்ந்த முதல்வர் பட்நவிஸ், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பதற்றமான பகுதிகள் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோட்வாலி, கணேஷ்பீத், லகட்கஞ்ச், பச்பாவோலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
* விஎச்பி, பஜ்ரங் தளம் நிர்வாகிகள் மீது எப்ஐஆர் பதிவு
விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங் தளம் போராட்டத்தை தொடர்ந்து தான் நாக்பூரில் கலவரம் வெடித்தது. அதில், ஒரு மத நூலை எரித்ததாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கணேஷ்பீத் போலீசார் மகாராஷ்டிரா மற்றும் கோவா விஎச்பி செயலாளர் கோவிந்த் ஷெண்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோல், பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி நிர்வாகிகள் பெயர்கள் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளன. மத உணர்வுகளை காயப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.
*‘சாவா படம் தான் காரணம்’ பழி போடுகிறார் பட்நவிஸ்
நாக்பூர் கலவரம் குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ‘‘நாக்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியாக தெரிகிறது. இந்த வன்முறை திட்டமிட்ட சதி. சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு வெளியான சாவா படத்தை பார்த்த பிறகு, அவுரங்கசீப் மீது மக்கள் வெறுப்பும் கோபமும் அடைந்துள்ளனர். மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டதற்கு இது ஒரு காரணம், என தெரிவித்துள்ளார்.
* பட்நவிஸ்தான் காரணம் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
நாக்பூர் வன்முறை குறித்து தெரிவித்த, உத்தவ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே, ‘‘மகாராஷ்டிரா அரசும், உள்துறையை வைத்திருக்கும் மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிசும்தான் நாக்பூர் வன்முறைக்கு காரணம். உள்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு அவரது தொகுதியிலேயே கலவரம் வெடிக்கக்கூடும் என தெரியாதா? மாநிலத்தில் இந்து-முஸ்லிம் வன்முறையைத் தூண்ட இந்த அரசு கடந்த ஒரு மாதமாகவே முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இவை இந்து, முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடியவை. எனினும் அதில் அரசியல் ஆதாயம் அடைய அரசு விரும்புகிறது’’ என்றார்.
The post அவுரங்கசீப் சமாதியை இடிக்கும் விவகாரம் போர்க்களமானது நாக்பூர்: புனிதநூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியதால் வன்முறை, 34 போலீசார் படுகாயம்; 50 பேர் கைது, ஊரடங்கு அமல் appeared first on Dinakaran.