டெல்லி: ஆங்கிலேயர்கள் நடத்திய ஆட்சியை விட பாஜக நடத்தும் ஆட்சி கொடூரமாக இருப்பதாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர். நான், துணை நிலை ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். நான் சிறையில் இருப்பதால் ஆகஸ்ட் 15 அன்று என்னுடைய அமைச்சர் அதிஷி, தேசியக் கொடியை ஏற்றுவார் என்று தெரிவித்திருந்தேன். இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.
ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. பாஜக ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள். பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் நமது முன்மாதிரிகள். ஆங்கிலேயர்களை அகற்றினால் மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் நம்மவர்கள் ஆங்கிலேயரை விட மோசமாக இருப்பார்கள் என்றும் பகத்சிங் அடிக்கடி கூறுவார்.
அவரது கணிப்பு மிகச்சரியாக நடந்துள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம். டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை அகற்றி இருக்கிறார்கள். பகத்சிங்கை விட இந்த நாட்டுக்காக அதிக தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்களா?. அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் கனவுகளை நனவாக்கவே ஆம் ஆத்மி அரசியலுக்கு வந்து இருக்கிறது. அதிகாரத்துக்காக வரவில்லை. மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2,500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
The post ஆங்கிலேயர்கள் நடத்திய ஆட்சியை விட பாஜக ஆட்சி படுமோசம்: சிறையிலிருந்தபோது கடிதம் எழுத அனுமதிக்கப்படவில்லை என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.