டெல்லி: ஆதார் விவரங்களை தனியார் நிறுவனம் பயன்படுத்த அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் தடையின்றி பெற உதவும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தற்போது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளை பெற கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சேவை மற்றும் நலத்திட்டங்கள் என எதுவாக இருந்தாலும் ஆதார் விவரமே தற்போது முதன்மையானதாக கேட்கப்படுகிறது. வங்கி கணக்கு துவங்குவது, கியாஸ் சிலிண்டர் பெற என அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார எண் விவரம் பெறப்படுகிறது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படத்தன்மை மற்றும் மோசடிகளை தடுக்க ஆதார் பெரிதும் உதவுவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆதார் விவரங்களை சரிபார்க்க அரசு அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது வரை அனுமதி உள்ளது. இந்த நிலையில் தான் சில முக்கிய சேவைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களும் ஆதார் சரிபார்ப்பு பணிகளை மெற்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ஆதார் சட்டம் 2016 சிறந்த ஆளுகைக்கான ஆதார் சரிபார்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படுள்ளது. இந்த திருத்தங்களின் மூலம் அரசு மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களும் ஆதார் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆன்லைன் வர்த்தகம், பயணம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் எளிதாக பெற இந்த சட்ட திருத்தம் உதவும். 2020 விதிகளின்படி ஆதார் சரிபார்ப்பு பணிகளை மத்திய மாநில அரசு அமைப்புகள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. சிறந்த நிர்வாகம், பொது நிதி முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்ற பணிகளுக்காக செய்ய முடியும் என்ற விதி இருந்தது.
இவற்றில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது நலன் கருதி பல்வேறு சேவைகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள இந்த திருத்தம் வழி வகை செய்கிறது. ஆதார் விவரங்களை பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை உள்ளிட்ட விவரங்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஆதார் ஆணையம் அளிக்கும் பரிந்துரையை ஏற்று மத்திய மின்னணு அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று ஜ கூறப்பட்டுள்ளது. வணிக பயன்பாடுகளுக்கு ஆதார் விவரங்க்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டம் 57-வது பிரிவு அனுமதி அளித்து இருந்தது.
The post ஆதார் விவரங்களை தனியார் நிறுவனம் பயன்படுத்த அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.