சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ரூ 62.50 கோடிக்கான வரைவோலைகளை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கடந்த 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், “கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை ரூ2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகள் மேற்கொள்ள, உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 62.50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழ்நாடு முதல்வர் நேற்று கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
பேரூர் ஆதீனம் சாத்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சுற்றுலா-பண்பாடு-அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ரூ62.50 கோடிக்கான வரைவோலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.