திருமலை: ஆந்திராவில் இன்று அதிகாலை சாலை தடுப்பு சுவரில் மோதி காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி நள்ளிரவில் பீலேர் நோக்கி புறப்பட்டது. அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி அடுத்த சம்பேபள்ளியில் அதிகாலை 5 மணியளவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறியது. இந்த விபத்தில் டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அப்போது சாலையில் அதிக வாகன நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் உதவியுடன் லாரியை உடனடியாக அகற்றினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஆந்திராவில் இன்று அதிகாலை காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.