அமராவதி: ஆந்திராவில் யானை தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் அண்ணமயா மாவட்டம் குண்டலக்கோனாவில் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாத யாத்திரையாக வனப்பகுதி வழியாக செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சிவன் கோயிலில் பூஜை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பக்தர்கள் உள்ள பகுதிகளுக்கு வந்த காட்டு யானைகள் பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதில் தினேஷ், மங்கம்மாள், திருப்பதி செங்கராயுடு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் நிதி உதவி வழங்குமாறு அவர் உத்தரவிட்டார்.
மேலும் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, வனப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
The post ஆந்திராவில் யானை தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.