புதுடெல்லி, மே 9: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தீவிர தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இந்தியாவும் நேரடி தாக்குதலை தொடர்ந்ததால் உச்சகட்ட பதற்றம் உருவாகி உள்ளது. காஷ்மீரில் ஏப்.22 ஆம் தேதி பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கத்தொடங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நுழைந்து இந்தியாவின் முப்படைகளும் இணைந்து சரமாரி தாக்குதல் நடத்தி, அங்குள்ள 9 தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. இந்த தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்தியா மற்றும் உலக அளவில் தீவிரவாதத்தை பரப்பி வந்த ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயிற்சி மையங்கள் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் மீது நேற்றுமுன்தினம் முதல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் இதுவரை 16 பேர் பலியாகி விட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. 54 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் ஏவியது. நேற்று அதிகாலை அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய், பூஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஒருங்கிணைந்த எதிர் ஆளில்லா விமான அமைப்பு (கிரிட் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள்) மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானுக்கு பதிலடியாக நேற்று இரண்டாம் நாளாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் லாகூரில் உள்ள ஒரு பாகிஸ்தானிய வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் உள்ள பகுதிகளில் சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் பாக். ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியா எல்லையில் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு வீரர்கள் மத்தியில் பயங்கர மோதல் வெடித்துள்ளது.
இந்தியா ஏவிய டிரோன்கள் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக கூறப்படும் நிலையில், 25 இந்திய டிரோன்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. லாகூர், குஜ்ரன்வாலா, சக்வால், பஹாவல்பூர், மியானோ, கராச்சி, சோர், ராவல்பிண்டி, அட்டாக் ஆகிய பகுதிகளில் இந்த டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினெண்ட் ஜெனரல் சௌத்ரி கூறியுள்ளார். இவற்றில் ஒரு டிரோன் கீழே விழுந்ததில் சிந்து மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். லாகூரில் உள்ள ஒரு ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒரு வான் பாதுகாப்புகட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் பாக். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று இரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. ஜம்மு விமான நிலையத்தில் 2 டிரோன்கள் பெரிதாக வெடித்தன. மேலும் ஏராளமான பாக். விமானங்களும் அணி வகுத்தன. இதை இந்தியா விமானப்படை அதிரடியாக செயல்பட்டு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதே போல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதன்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாக். படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியாவும் பதிலடி கொடுத்தது. 4 பாக். விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாக். நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முப்படைகளுடன் அதிரடியாக ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நேரடியாக இந்தியாவும் பதிலடி கொடுத்தது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் லாகூர், சியால்கோட், கராச்சி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இந்தியா நேரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடியாக போர் மூண்டது. அணுஆயுதம் வைத்துள்ள இருநாடுகள் இடையே நேரடி போர் மூண்டதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
The post ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத மோதல் இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டது: காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது ஏவுகணை வீச்சு appeared first on Dinakaran.