மும்பை: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் இருக்கும் 9 இடங்களை கண்டறிந்து கூடாரத்தை அழித்தது. இதில் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்திய ராணுவம் பெயரிட்டது. நாட்டில் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகள் அல்லது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதை மையப்படுத்தி திரைப்படம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில், மும்பையை சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் பாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற டைட்டிலை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் பிரடியூசர்ஸ் அசோசியேஷன் சங்கத்தில் இந்த பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் இந்த பெயரை மஹாவீர் ஜெயின் என்ற நிறுவனம் பதிவு செய்துள்ளது. அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் அசோக் பண்டிட், மாதுர் பண்டார்கர் மற்றும் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் அசோக் பண்டிட் பேசுகையில், ‘‘பகல்ஹாம் தாக்குதலை மையப்படுத்தி எதிர்காலத்தில் திரைப்படம் உருவாகுமா இல்லையா என்பது தெரியாது, ஒரு தயாரிப்பாளராக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அந்த பெயரை பதிவு செய்வது மிக முக்கியம். பதிவு செய்த அனைவரும் படம் எடுப்பார்கள் என்பது கட்டாயமில்லை, அப்படி பெயரை பதிவு செய்தால் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். அதனால் நானும் இந்த டைட்டிலுக்கு பதிவு செய்துள்ளேன்’’ என்றார்.
The post ‘ஆபரேஷன் சிந்தூர்’ தலைப்புக்கு போட்டி போடும் சினிமா நிறுவனங்கள் appeared first on Dinakaran.