டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு சென்றிருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டது, மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். வானிலை மற்றும் அரசியல் மாசுபாடு காரணமாக மக்கள் டெல்லியில் தங்குவது குறித்து கவலையடைந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல பொதுக் கொள்கையை கொண்ட ஒரு அரசாங்கம் சமூகத்தை மாற்றும். டெல்லியில் செயல்படும் ஆம் ஆத்மி அரசு என்பது அரை இயந்திர அரசு. வளர்ச்சியை அடைய டெல்லியில் இரட்டை இயந்திர அரசு தேவை. டெல்லியில் வாழும் ஏழை மக்கள் சிந்திக்க வேண்டும். நாம் நிரந்தரமாக குடிசையிலேயேதான் வாழ வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மேலும், 2025ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டு பணியாற்றுவோம். பிரதமர் நரேந்திர மோடி கங்கையை சுத்தப்படுத்தினார். ஆகவே டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் யமுனை நதியையும் மோடி சுத்தப்படுத்துவார் என்று தெரிவித்தார்.
The post ஆம் ஆத்மியின் அரை இயந்திர அரசு டெல்லியை அழித்து விட்டது; வளர்ச்சி அடைய இரட்டை இயந்திர பாஜக அரசு தேவை: சந்திரபாபு நாயுடு விமர்சனம் appeared first on Dinakaran.