டெல்லி: ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ஆர்.எஸ்.எஸ். கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால், இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள்.
ஏனெனில் ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்தான் இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உள்ளனர். மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எல்லாருமே ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள். தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்னை வேலைவாய்ப்பின்மைதான். சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி, கும்பமேளா குறித்துப் பேசினார். ஆனால் வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் பேச வேண்டும். பாஜக – ஆர்எஸ்எஸ் மாடல், அம்பானி மற்றும் அதானிக்கு ஒட்டுமொத்த வளத்தையும் வழங்க நினைக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ராகுல் பேசினார்.
The post ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு! appeared first on Dinakaran.