திருவனந்தபுரம்: ரஷ்யாவில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்த பல இளைஞர்களை ஏமாற்றி ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு ராணுவத்தில் சேர்த்து அவர்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது. எனவே யாரும் ஏமாந்து இதுபோல வேலைக்கு செல்ல வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ரஷ்ய அரசுக்கு தெரிந்தே தான் இந்த ஆள்கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல ஏமாற்றப்பட்டு ரஷ்யா சென்ற திருச்சூரை சேர்ந்த சந்தீப் சந்திரன் (36) என்பவர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. தற்போது திருச்சூர் மாவட்டம் குட்டநெல்லூர் பகுதியைச் சேர்ந்த பினில் பாபு என்ற வாலிபரும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவருடன் ரஷ்யா சென்ற ஜெயின் குரியன் என்ற வாலிபர் போரில் காயமடைந்ததாக இந்திய தூதரகத்திற்கு தகவல் வந்துள்ளது. இவர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
The post ஆள் கடத்தல் கும்பல் மூலம் சென்றவர் உக்ரைன் போரில் மேலும் ஒரு கேரள வாலிபர் பலி: ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.