சென்னை: ஆவண காப்பகத்தில் 1670ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரித்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். சென்னை, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:
2007ல் கலைஞர் வரலாற்று ஆவணங்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரலாற்று ஆவணங்களை பராமரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பின் வந்தவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. தற்போதுதான் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கட்டிட புனரமைப்பு பணி மற்றும் ரூ.10 கோடி மதிப்பில் நடைபெறும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆவணங்கள் செப்பனிடுதல் பணி மற்றும் ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்யும் பணி உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டோம்.
இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த ஆவணக் காப்பகத்தில் 1670ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
1973ம் ஆண்டு கலைஞர் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு ஆராய்ச்சி மன்றம் தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டு தற்போது செயல்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 15 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25000 வீதம் இரண்டாண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
The post ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் 1670ம் ஆண்டு முதல் இதுவரை 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல் appeared first on Dinakaran.