understand kashmiriஜம்மு – காஷ்மீர் மனநிலையானது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருப்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 7 மாவட்டங்களில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்தெடுப்பு சொல்லும் தகவல்கள் நாம் காஷ்மீரிகளை மேலும் புரிந்துகொள்ள வழிவகுப்பவை!

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல் 2014 நவம்பர் டிசம்பரில் நடந்தது. 2014 மே மாதம் மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகுதான் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் இதுவரை இருந்திராத அளவுக்கு வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர். ஜம்மு பிராந்தியத்தில் 25 தொகுதிகளை பாஜக அணி வென்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக தொகுதிகளை வென்றது. ஒரே அணியிலோ, அரசிலோ இடம்பெறவே முடியாத இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தன.

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான வாக்காளர்களின் எண்ணமாக இருந்தது. அது நிறைவேறவும் செய்தது. பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் அங்கே காப்புத்தொகையையும் இழந்தார்கள். தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தக் கூட்டணியை மக்கள், ‘இப்போதைக்கு அரசை நடத்தக் கூடிய கூட்டணி’ என்றே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பாலான மக்கள் பாஜகவை இந்துக்களின் கட்சி என்றே பார்க்கின்றனர், இருந்தாலும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் காஷ்மீரின் முன்னேற்றத்துக்கு அக்கட்சியுடன் கூட்டு வைப்பது நன்மையைத் தரும் என்றும் நினைக்கிறார்கள்.

பள்ளத்தாக்கில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்கள், மக்கள் ஜனநாயகக் கட்சி மீதும் அதன் தலைவரான முதலமைச்சர் முப்தி முகம்மது சையீத் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர் உள்ளூர்க்காரர் என்பதால் உள்ளூர்க்காரர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார் என்று நம்புகின்றனர். தீவிரவாதிகளின் பேச்சைக் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டதும், பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலை மழுங்கியதும் பிற காரணங்கள்.

பாகிஸ்தான் தோல்வுயுற்ற நாடு

பாகிஸ்தான் என்பது அனைத்து வகைகளிலும் தோல்வியுற்ற நாடு, காஷ்மீர் அதனுடன் சேருவதன் மூலம் அதன் எதிர்காலம் நன்றாக இருக்காது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அவர்கள் முழுக்க ஆதரிக்கின்றனர். பாஜக அந்த சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ முயலாது என்றும் நம்புகின்றனர். “உலகில் உள்ள எந்த சக்தியாலும் 370-ஐ மாற்ற முடியாது, அப்படி முயன்றால் பெரிய எழுச்சியே ஏற்படும்” என்று ஒரு நடுத்தர வயதுக்காரர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். அப்படி மாற்ற முயன்றால் 2008-ல் ஏற்பட்டதைவிட மிகப்பெரிய ரத்தக்களரி ஏற்படும் என்று பலரும் எச்சரித்துள்ளனர். அமர்நாத் யாத்ரிகர்கள் தங்குவதற்கு காஷ்மீரில் இடம் ஒதுக்க முற்பட்டபோது 2008-ல் மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அவசியப்படலாம், ஆனால் அது எல்லைப்புறங்களில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும், எப்போதாவதுதான் அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தது வியப்பை அளித்தது. அச்சட்டம் நகரில் அமல்படுத்தப்படுவது குறித்துப் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளின் வன்செயல்களால் தாங்கள் களைத்துப்போய்விட்டதாகக் கூறிய பலர், போலி மோதல்கள், திடீரென சிலர் காணாமல்போவது, இந்திய பாதுகாப்புப் படையினர் திடீரென நிகழ்த்தும் பாலியல் வன்செயல்கள் போன்றவையும் தங்களுக்குக் கோபத்தையே ஊட்டுகின்றன என்றும் கண்டித்தனர். எங்களுடைய சொந்த மாநிலத்திலேயே அடிக்கடி எங்களை வீதியில் நிறுத்தி சோதனை போடுவதும் அடையாள அட்டையைக் காட்டச் சொல்வதும் நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வையே ஊட்டுகின்றன என்றனர். அப்படி சோதிக்கப்படுவதை அவர்கள் வெறுப்பதற்குக் காரணம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மனநிலையால் அல்ல, தங்களுடைய சுய மரியாதையைக் குலைப்பதால்தான் என்பதைத் தெளிவுபடுத்தினர்.

அதே வேளையில் இந்தக் கருத்துகளால் காஷ்மீர விடுதலைக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவிட்டது என்று கருதிவிட முடியாது. எல்லோருமே காஷ்மீரின் விடுதலையை ஆதரிக்கின்றனர். தனக்கு எது நன்மை என்பதை காஷ்மீர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அனைவருமே வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய இந்தக் கருத்து பல அடுக்குகளைக் கொண்டது. காஷ்மீர் இளைஞர்கள் தங்களுடைய சுயாட்சி ‘இஸ்லாமிய ஆட்சிக்கு’ வழிசெய்வதாக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். அவர்களுக்கு பழைய காஷ்மீரின் நிலைமை குறித்தோ பண்டிட்டுகளும் சேர்ந்ததுதான் காஷ்மீர் என்பதோ தெரியவில்லை. பெரும்பாலானவர்கள், பண்டிட்டுகளை இந்தியாவின் பிரதிநிதி என்றே நினைக்கின்றனர் அவர்களால்தான் காஷ்மீருக்கு அவமதிப்பு என்ற எண்ணமும் அவர்களுக்குள் இருக்கிறது. பண்டிட்டுகள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையாது என்று மூத்த தலைமுறையினர்தான் நினைக்கின்றனர். பண்டிட்டுகள் வெளியேறியதால் காஷ்மீரப் பள்ளத்தாக்கில் கல்வி பாழாகிவிட்டது என்று பலரும் வருந்துகின்றனர்.

மனநிலை உணர்த்துவது என்ன?

காஷ்மீரிகள் எதார்த்த நிலையை நன்கு புரிந்து வைத்துள்ளனர். டெல்லியில் இருப்பவர்கள் தங்களை அவமதிக்கிறார்கள் என்றே கருதுகின்றனர். இந்திய அரசிடமிருந்து மனதளவில் விலகியே நிற்கிறார்கள். வளர்ச்சி வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்புகள் வேண்டும், இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் இவை கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர், அதேசமயம், உள்ளூர் மக்கள் நடத்தப்படும் விதத்தால் மனம் ரணமான நிலையில் இருக்கின்றனர்.

நாடாளுமன்றம் தாக்கப்பட்டது தொடர்பான சம்பவத்தில் அப்சல் குருவைத் தூக்கில் போட்டதை அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர். அப்சல் குரு பயங்கரவாதி அல்ல. அப்படியிருக்க அவரைத் தூக்கில் போட அவசரம் காட்டியது ஏன் என்று கேட்கின்றனர். அவரைத் தூக்கில் போட்டதல்லாமல் அவருடைய சடலத்தைக்கூட குடும்பத்தாருக்குக் கொடுக்க மறுத்த செயலை அவர்களால் மன்னிக்கவே முடியவில்லை. மஸ்ரத் ஆலத்தை விடுதலை செய்ததை அனைவருமே ஆதரிக்கின்றனர். அவர் பயங்கரவாதி அல்ல, அதே சமயம் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியவர் என்கின்றனர்.

இது காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள இந்திய அரசுக்கும் ஏனைய இந்திய சமூகங்களுக்கும் ஒரு சின்ன வாய்ப்பு. காஷ்மீரிகளின் சந்தேகங்களைப் போக்கவும் துயரங்களைத் தீர்க்கவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் நடவடிக்கைகளை எடுப்பது நம் பொறுப்பு. தொடர் பேச்சுவார்த்தைகளும் வளர்ச்சிப் பணிகளும் இரு தரப்பின் நல்லெண்ணங்களை வளர்த்தெடுக்கவும் உறவுப் பாலத்தைப் பலப்படுத்தவும் உதவும்.

கட்டுரையாளர், டெல்லி ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுகளுக்கான மையத்தைச் சேர்ந்தவர். © தி இந்து, தமிழில்: சாரி

– தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *